Thursday, 9 December 2021

 

மாற்றுத்திறன் மாணவர் கல்வியில் மாற்றம் தேவை

.கோ.தில்லைராஜன்

      மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஆன்றோர் வாக்கு. அரிய மானிடராய் பிறந்து உடல் நலத்துடன் இருபவர்கள் இன்றைய சமுதாயத்தில் போரட்டங்களை எதிர் கொண்டு வாழவேண்டிய கட்டாயத்திலிருக்க மாற்று திறன் கொண்டவர்களின் நிலை மிகவும் கடினமானது. இதை அன்றும், இன்றும் எந்நிலையில் வாழ்ந்தனர் என்பதை காண்போம்.

      பண்டைய காலம்தொட்டே கூன், குருடு, செவிடு, பேடு என்ற குறைபாட்டுடன் மாற்றுத்திறன் உடையவர்கள் சமூகத்தில் இருந்தனர். இவ்வகையான குறைபாட்டினை உடைவர்களைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான நூல்களும், கல்வெட்டுகளும் சுட்டிகாட்டுகின்றன.

      மணிமேகலையில் குருடர், ஊமை, கால்முடமானோர், ஆதரவற்றோர், குட்டம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோர் காணப்பட்டனர். அவர்களுக்கு வீடுதோறும் சென்று உணவினைப் பெற்று பகிர்ந்தளித்தான் ஆபுத்திரன் (மாற்றுதிறனாளிக்கு முதன்முதலில் மறுவாழ்வளித்தவன்) எனச் சீத்தலைச்சாத்தனர் தம் காலத்து மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

      சோழ அரசர்களின் ஆட்சி காலத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. திருபழனத்தில் காணப்படும் முதலாம் ஆதித்தன் கல்வெட்டில் பன்னிரண்டு பார்வையற்றவர்களுக்கு இரண்டு கண்காட்டுபவர்கள் (வழிகாட்டிகள்) நியமிக்கப்பட்டிருந்தனர். திருவாமாத்தூர் கல்வெட்டில் இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் பதினாறு பார்வையற்றவருக்கு இரண்டு வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கொடை வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது, மேலும் உடல்உறுப்பு குறைபாடுடையவர்களான கூனர் என்ற முதுகு வளைந்தோர், குறளர் எனப்பட்ட உடல் குட்டையானவர்கள் அன்றைய சமுதாயத்தினரால் ஒதுக்கி வைக்கப்படாமல் சமூகத்துடன் ஒன்றியே வாழ்ந்தனர் என்பதை முன்னியூரில் காணும் இரண்டாம் இராசாதிராச சோழன் கல்வெட்டில் காணலாம். கோயிலில் உள்ள திருவிளக்குகளை பராமரிக்கக் கூனர், குறளர் முதலானோருக்கு  பணிநியமனம் செய்தும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு சோழ அரசு நிலக்கொடை வழங்கி பாதுகாத்தது.

      மனவளர்ச்சி குன்றியோர் குறித்து மணிமேகலையில்

      பேதைமை என்பது யாது என வினவின்

      ஒதிய இவற்றை உணராது மயங்கி

                                          எனப் பேதைமை என்ற சொல் தாம் கற்றவற்றை நினைவில் கொள்ள இயலாத நிலையை சுட்டுவதால் இதனை மனவளர்ச்சி குன்றியவருக்கானதாகக் கருதலாம். மனவளர்ச்சி குன்றியவர்களும் மாற்றுத்திறன் கொண்டவர்களே. காலங்காலமாக மாற்றுத்திறன் கொண்டோரின் வாழ்க்கையினை அன்றைய அரசுகளால் பாதுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாகியவை இலக்கியமும், கல்வெட்டுகளுமே.

      இக்காலத்தில் மனவளர்ச்சி குன்றியவர்கள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவ்வடிப்படையில் அவர்களின் அறிவுக்கூர்மையின் அடிப்படையில் பாகுப்படுத்தப்படுகிறது. பொதுவாக நுண்ணறிவு விகிதநிலை 70 க்கு கீழ் இருப்போர்கள் இவ்வகை குறைபாடு கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் நுண்ணறிவு விகிதநிலையினை மனவளர்ச்சி மற்றும் அறிவுகூர்மையின் அடிப்படையில் சிறிதளவு 69-55,  ஓரளவு 54-40, மோசமானது 39-25,மிகவும் மோசமானது 24 க்குக்கீழ் எனக் கணக்கிடப்படுகிறது.

      இக்குறைபாடுடையவர்களை கல்வி நிலையில்,

கல்வி கற்க கூடிய மனவளர்ச்சி குன்றியவர்கள்,

பயிற்சியளிக்கக்கூடிய மனவளர்ச்சி குன்றியவர்கள்,

முழுமையாக மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்கள்

என மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

      இவ்வகையினரில் கல்வி கற்கக் கூடிய மனவளர்ச்சி குன்றியவர்கள் சற்று சமூகத்தினருடன் கலந்து வாழ்கின்றனர். இவர்களிடம் பல்வேறு தனித்திறன்கள் திகழ்கின்றன.

சிலர் திக்கிதிக்கி பேசவும், சொல்வதைக் கேட்டுநடப்பவராகவும் ,

சிலர் பேச்சில் தெளிவற்று ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பேசகூடியவர்களாக. தங்களின் சுயதேவைகளையும் உடல் சுத்தத்தை தங்களே சுயமாகவே பேணிவருகின்றனர். இவ்வகையினரின் வாழ்வாதாரமாக இருப்பது நகர்புறங்களில் பல்வேறு தொழிற்கூடங்களிலும், வணிக நிறுவனங்களிலும், கிராமபுறத்தில் கால்நடைபராமரிப்பு, வேளாண், தோட்டவேலை முதலான பணிகளே.

      இவர்களின் வாழ்க்கையானது முழுவதும் பெற்றோரையே சார்ந்துள்ளது. பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் வேளையில் மாற்றுத்திறன் பெண்குழந்தைகள் சிலநேரங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படநேருகிறது. பெற்றோர் மறைவிற்குப்பின் ஆதரவற்றவர்களாக விடப்படுவது மிகவும் வருந்ததக்கது.  இவ் ஆதரவற்றவர்களை அடையாளம் காணும் தன்னார்வலர்கள் அரசுகாப்பகம், அரசு உதவிபெறும் தொண்டு நிறுவனக் காப்பங்களில் ஒப்படைத்துவிடுவதால் இந்நிறுவனங்கள் இவர்களின் வாழ்விற்கு அரணாகிறது.    

கைவிடப்பட்டவர்கள் அழுக்கடைந்த உடையுடன், பரட்டைத்தலையுடனும் உணவிற்காகக் குப்பைத் தொட்டிகளுடன் வாழும் நிலையும், தேனீர் கடைகள், உணவகங்கள் முன்பாக கையேந்திய நிற்கையில் வாடிகையாளர்களின் முகசுளிப்பால்  மாற்றுதிறனாளிகளின் மீது தண்ணீர் ஊற்றுவது, தடிகொண்டு மிரட்டவது முதலான செயல்கள் தொடர்வது இவர்களின் வாழ்வில் பரிதாபநிலையே. இந்நிலையினை போக்க அரசு நடவடிக்கை எடுத்தபோதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழத்தான் செய்கின்றன.

      பள்ளி மாணவர்களில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு பலசலுகைகளை வழங்கிவருகின்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம் 2000 என்ற திட்டத்தின் கீழ் மாறுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி செயல்படுத்தப்பட்டுவருகிறது. கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு அனைவரும் தேர்ச்சியளிக்கப்பட்டு வருகின்றனர். அதன் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களும் தேர்ச்சியுறுகின்றனர். இவர்களின் கற்றல் படி நிலையில் தேக்கமானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் சரிவினை சந்திகின்றது. கல்வி நிறுவனங்கள் மாற்றுத்திறன் மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றமின்மையால் தங்கள் நிறுவனத்தின் தேர்ச்சி சதவீதத்தினைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரைகளை வழங்கி பள்ளியினை விட்டு வெளியேற்றி விடுகின்றனர். இவ்வெளியேற்றம் இல்லாமல் தொடந்து கல்வி  நிலை உயர்வடைய குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை உருவாக்குதல் அவசியம். இம் மாணவர்களுக்கான தனி பாடதிட்டம், பாடப்பொருள் ஆகியவை தொழிற்சார்ந்த அடிப்படையில் உருவாக்கியும், அம் மாணவர்களின் அறிவுத்திறனுக்கேற்ப மதிப்பீடு செய்வதும் மதிப்பெண்பட்டியலும் அவசியம். இம் மாணவர்கள் பயில்வதற்கு குறுவளமைய அளவில் சிறப்பு இணைப்பு பள்ளிகளை உருவாக்கத் திட்டமிடல் தேவையானதொன்றாகும். இத்திட்டத்தினால் தொடர்ச்சியான கல்வி பெறுவதனால் அவர்கள் சமூகத்தில் கூடிவாழும் வாய்ப்பினை பெறுவதற்கு மாற்றுத்திறன் மாணவர் கல்வியில் மாற்றம் தேவை என்பதே நிதர்சனமாகும்.

      மாற்றுத்திறனாளியானவர் மாணவர் பருவத்திலேயே எதிர்காலத்திற்கு தேவையான கைதொழில் அடிப்படையான கல்வியினை பெறுவதனால் தன்னிச்சையாக பிறர் உதவியின்றி சுயமான வாழ்க்கை வாழமுடியும் என்பதே உண்மை.

       

No comments:

Post a Comment