Monday, 5 March 2012

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்
தில்லை கோவிந்தராஜன்
கடுவையாறு வங்கக் கடலோடு கலக்குமிடத்தில் வணிகக்கப்பல்கள் வந்து செல்லும்
ஊர் நாகப்பட்டினமாகும்.சங்க இலக்கியமான குறுந்தொகையில் இரண்டு பாடல்களைப்
பாடிய நன்னாகையார் இவ் ஊரைச் சேர்ந்தவர் என்பர்

நாகை
சங்க காலத்திலும்,பல்லவர் காலத்திலும் இவ்வூர் நாகை என்ற பெயருடன்
விளங்கியது.பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதியிருந்துள்ளது. பல்லவர்கள் கல்வெட்டில்
நாகை என்ற சொல்லாட்சி நாகநாதர் கோயிலில் முதல் முதலாக
பொறிக்கப்பட்டுள்ளது என்பதை முனைவர் பா.ஜெயக்குமார் தமது ஆய்வு
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அக் கல்வெட்டு அக் கோயிலில்
காணமுடியவில்லை,
பல்லவர்களின் சமகாலத்து நாயன்மார்களும் தஙகள் தேவாரப் பாடல்களில்
கலங்கள் சேர் கடல் நாகை, வங்கமலி கடனாகை என கடற்கரையை ஒட்டியுள்ள நாகையைக் குறிக்கும் விதத்தில் சுட்டுகினற்னர்.
பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் கல்வெட்டுகளில் சத்திரிய சிகாமணி
வளநாட்டு பட்டினக்கூற்றத்து நாகப்படடினம்
என்றும்,கெயமாணிக்க வளநாட்டு
பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினமான சோழகுலவல்லி பட்டினம்
எனவும்
பொறித்துள்ளனர். இக் கல்வெட்டுகளை நோக்கும் போது பல்லவர் காலத்தில் சிறு
வணிகத்தலமாக விளங்கிய நாகை பல்நாட்டு வணிகர்களும் வந்து செல்லும்
பட்டினமாகவும்,சமய, பண்பாட்டுத் தலமாகவும் விளங்கியது என்பதை
உணரமுடிகிறது.

பாசுபத சைவம்
தமிழகத்தில் கச்சி, குடந்தை, நாகைக் காரோணங்களை நாயன்மார்கள் தங்கள்
தேவாரப் பாடல்களில் போற்றியுள்ளனர். இத் தலங்கள் பாசுபத சைவர்களின்
முக்கிய வழிபாட்டுகுரியனவாக திகழ்ந்துள்ளன. இங்கு சமணம்,
பௌத்தம், சைவம,வைணவம் பேன்ற பல சமயங்கள் சிறப்போடு விளங்கின.சமய
மறுமலர்ச்சியினால் சமணம் சைவத்தினாலும்,பௌத்தம் வைணவத்தாலும்
வீழ்ச்சியுற்றன. சமண,பௌத்த தடயங்களை இன்றும் இந்நகரங்களில்
காணமுடிகின்றது. பாசுபத சைவம் நாகையில் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நாகைக் காரோணர்
நாகை நகரின் மையத்தில் பெரியகோயில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படும்
நாகை காரோணம் கோயில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும்.
ஞானசம்பந்தரும் கடல்நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள
இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.முதலாம் இராஜராஜன் மற்றும்
முதலாம் இராஜேந்திரன் ஆட்சியாண்டினைக் குறிக்கும் கல்வெட்டுகளில்
காரோணமுடைய மகாதேவர் என்றும். இவ்வரசர்களுக்குபின் ஆட்சிக்கு வந்தவர்கள்
உடையார் திருக்காரோணமுடையார் என்றும் இறைவனைச் சுட்டியுள்ளனர்.
சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாக நாகை காரோணம் உள்ளது. இங்கு இறைவன்
சுந்தரவிடங்கராக எழுந்தருளியுள்ளார்.இவ்விடங்கரை
க் கல்வெட்டுகளில்
அழகவிடங்கர் எனக் குறிப்பிடுகின்றனர். காரோணம் என்ற நிலையில் பாசுபத
சைவத்துடன் தொடர்புடையது இதன் முலம் அறியமுடிகின்றது.

நடராஜர்
காரோணர் சன்னதியை அடுத்து தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில்
வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும்,கருத்தையும்
கவருவதாகவுள்ளது. இதுபோன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும்
அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை
காணமுடியும்.அச்சிற்பம் நடராஜர் சிற்பமாகும்.இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர்
சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும்
ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் குடமுழா இசைக்க
மறுபுறம் பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும்
அமைந்துள்ளது.ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில்  கங்காதேவியின்
உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை
மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும்
வடிக்கப்பட்டுள்ளதால்(உயர்ந்த பாசுபத விரதம் ஞானம் எனப்படும், சிவன்
யோகஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என
ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது
தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது.இச்சிற்பத் தொகுதியை
நோக்கும்போது அது சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது.இதனை
வடிப்பதற்குக் காரணமாக அமைவது நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின்
ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால்
நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி
மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்
கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட
இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே.

என்று சுட்டுகின்றார்.

நாகை காரோணத்தில் மற்றவர் காணிக்கை
தஞ்சை பெரியகோயிலில் மாமன்னன் முதலாம் இராஜராஜனின் ஆட்சிகாலத்தில்
மற்றவர்கள் தெய்வத்திருமேனிகளை செய்தளித்தது போல் நாகை காரோணத்திலும் பல
சோழர் கால அரசியல் தலைவர்கள் தங்கள் பங்களிப்பாக பல தெய்வத்திருமேனிகளை
செய்தளித்ததுள்ளனர். அவை அழகவிடங்கர்,அர்த்தநாரி,ஆடவல்லான்.
தட்சிணாமுர்த்தி
போன்றவையாகும். இச் சிற்பங்களைப்பற்றி
கல்வெட்டுகளும்,தேவாரமும் புகழ்ந்து பேசுகின்றன.

முதலாம் இராஜராஜனும்,முதலாம் இராஜேந்தினும்
இக் கோயிலின் மூலவர் கருவறையின் அருகில் உள்ள வெளிப்பிரகாரத்தில்
காணப்படும் தட்சிணாமுர்த்தி கோட்டத்தில் இருபக்கங்களிலும் அழகிய
அரசர்களின் உருவத்தோற்றத்துடன் கைகளில் மலர்ஏந்தி நின்ற நிலையில்
காட்சியளிகின்றனர். அவர்களில் இக் கோட்டத்தின் வலது பக்கத்தில் உள்ளவர்
சிற்பத் தோற்றத்தில் ஆடையானது அலங்காரமின்றி எளிய உருவில்
காணப்படுகின்றார். மேலும் கோட்டத்தின் இடது பக்கத்தில் உள்ளவர்
அழகியவேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையுடன் காணப்படுகின்றார்.இக் கோயிலில்
காணப்படும் பழமையான கல்வெட்டுகள் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம்
இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தவையாகும். அதனடிப்படையில் நோக்கும் போது
இவ்விரு சிற்பங்களும் அச் சோழஅரசர்களை குறிப்பதாக உள்ளதை உணரமுடிகின்றது.
பலல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால்
பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது.
இச்சிற்பத்தில் ஆடவல்லான், கங்காதரர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய
மூன்று திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை நாகைக்கோரணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்
    தில்லை கோவிந்தராஜன் - திரு Thillai Rajan எழுதிய கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி சார் திரு Thillai Rajan.

    ReplyDelete