Sunday, 27 November 2011

திருப்பழனம் சமண தீர்த்தங்கரர்

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் சிற்பங்களைத் தேடிச் சென்றபோது பெற்ற அனுபவங்கள் பலப்பல. அவற்றில் ஒன்றை முதல் பதிவாகப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். புதுதில்லி நேரு டிரஸ்ட் நிறுவனத்தின் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற ஆய்வுத்திட்டத்தினை முனைவர் பா.ஜம்புலிங்கம் மேற்பார்வையில் மேற்கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இத்திட்டத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்தது திருப்பழனத்தில் காணப்பட்ட ஒரு சமணர் சிற்பமே. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டததில் திருப்பழனம் சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் மிகச் சிறிய அளவிலான சமண தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இவ்வாறான சிறிய அளவில் தீர்த்தங்கரர் சிற்பம் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சிற்பத்தைக் கண்டுபிடித்த ஒரு முயற்சியானது இப்பகுதியில் உள்ள வேறு பல சமண சிற்பங்களைத் தேட உதவியாக இருந்ததுடன், புதுதில்லிக்கு ஒரு திட்ட வரைவு தயாரித்து அனுப்பவும் அடிப்படையாக இருந்தது. 14.02.2005ல் முதல் முதலாக இச்சிற்பத்தை நான் கண்டுபிடித்தேன். முன்னரே பல சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை நான் பார்த்த நிலையில் இது சமண சிற்பம் என்பதை உறுதி செய்யமுடிந்தது. இருப்பினும் இன்னும் சில ஆய்வாளர்கள் தம் கருத்தைத் தெரிவித்தால் எனது கருத்து வலுப்பெறும் என்ற நிலையிலும் அது சமணரா புத்தரா என்பது உறுதிப்பெறும் என்ற நிலையிலும் பிற ஆய்வாளர்களை அங்கு அழைத்துச்சென்றேன். முதலில் அச்சிற்பத்தைப் பார்க்க கல்வெட்டு ஆய்வாளர் திரு எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் திரு க.பத்மநாபன் ஆகியோர் உடன் வந்தனர். அச்சிற்பத்தைப் பார்த்த அவர்கள் அது சமணர் எனக் கூறினர். இருப்பினும் ஐயத்தைத் தெளிவுபடுத்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களை அழைத்துச்சென்றேன். அவர் அது புத்தர் அல்ல என்றதும் எனது கருத்துத இன்னும் உறுதியானது. புதிய சிற்பத்தை வெளிவுலகிற்குத் தெரியப்படுத்தும் வகையில் உடன் பத்திரிக்கைச் செய்தியாக வெளியிட்டு, பல பத்திரிக்கைகளில் அச்செய்தி வெளிவந்தது. இதற்கு முன்னர் நான் பல சிற்பங்களைப் பார்த்து பத்திரிக்கைச் செய்தி வெளியிருட்டிருந்தாலும், பின்னர் அதிகமான எண்ணிக்கையில் சமண தீர்த்தங்கரைக் கண்டுபிடிக்க திருப்பழனம் சமணர் சிற்பம் எனக்கு உந்துதலாக இருந்தது. என்னைச் சமணக் களத்தில் இறக்கியவர் இந்த திருப்பழனம் சமணத் தீர்த்தங்கரரே ஆவார்.